அப்பா

July 08 2016

அப்பா.. உங்களுக்கு ஒரு லெட்டர் எழுதணும்ன்னு நானும் ரொம்ப நாளா நினைச்சு தள்ளிப் போட்டுட்டே இருந்தேன்..இன்னிக்கு எழுதிதான் பாக்கலாம்ன்னு ஒரு முடிவுக்கு வந்துட்டேன்.

அப்பா.. நான் செய்யும் எல்லா விஷயத்தையும் நீங்க ஏத்துக்கறதில்லைன்னு எனக்கு ஒரு மனக்குறை பல நாட்கள் இருந்துருக்கு.. வேற வீட்ல பொறந்திருந்தா நல்லா இருந்துருக்கும்ன்னு கூட நெனச்சிருக்கேன். ஆனால் நான் வளர வளரத்தான் தெரியுது.. நீங்க ஏத்துக்காத என்னோட எல்லா முடிவுகளும் எனக்கு நன்மைதான் தந்திருக்கு. சின்ன வயசுல என்னை வெளியில் கூட்டிப் போறேன்னு சொல்லிட்டு,கிளம்பறப்ப‌ யாரோ ஒருத்தர் உதவின்னு வந்தவ உடனே அவ‌ங்களோட போன நிமிடம்ன்னு பல நேரங்கள்ல நினைச்சிருக்கேன்.. என்னை மாதிரி ஒரு நல்ல புள்ள கிடைக்க குடுத்து வச்சிருக்கணும் நீங்கன்னு .. ஆனால், சமீப நாட்களாகத்தான் உணர்கிறேன். உங்களுக்கு மகனாகப் பிறக்க நான் தான் கொடுத்து வைத்திருக்கிறேன்...

நான் எவ்வளவுதான் தவறுகள் செய்தாலும் உடனே மன்னிக்கவும் மறக்கவும் முடிகிறது உங்களால்.. ஆனால் நீங்கள் செய்யும் சரியான விஷயங்களையும்,அது என் விருப்பத்திற்கு மாறாய் இருந்தால் என்னால் ஏற்க முடியாமல் போகும் தவறு இனிமேல் நடக்காது...

எல்லா பசங்களையும் போல சாதாரண சந்தோஷங்களுடன் என்னை நீங்கள் வளர்க்கவில்லை எனக் கவலைப்பட்டிருக்கிறேன்..ஆனால் அசாதாரண அதீத சந்தோஷங்களை எனக்காக சேமித்து வைத்திருக்கிறீர்கள் என்பதை உணர எனக்கு இத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கிறது.

"அப்பாவாட்டமே புள்ள"அப்படின்னு சிலர் சொன்னப்போல்லாம் "இல்லை எங்கப்பா மாதிரி நான் இல்லை.. இப்படி சிக்கனம்னு  லூசுத்தனமெல்லாம் நான் வாழமாட்டேன்" என நினைத்த கணங்களுக்காய் வெட்கித் தலைகுனிகிறேன்.

பண‌ம் ம‌ட்டுமே வாழ்க்கை அல்ல‌.. அது அல்லாத‌ ம‌ற்றவைதான் அதி அற்புத‌மான‌வை என்ப‌தை உண‌ர‌ வைக்கிறீர்கள். உங்க‌ள் வாழ்க்கையால்.அதை உங்க‌ளிட‌மிருந்து ம‌ற்றவ‌ர்க‌ள் சுல‌ப‌மாய்ப் ப‌ற்றிக் கொண்டார்க‌ள். என‌க்குத் தான் நாட்க‌ள் அதிக‌ம் எடுத்திருக்கிற‌து. வெகு சாதார‌ண‌ ச‌ந்தோஷ‌ இழ‌ப்புக‌ளுக்காய் நான் அழுத‌ க‌ண‌ங்க‌ளில், நீங்க‌ள் க‌ண்முன் காட்டிய‌ அதிச‌ய‌ங்க‌ளைத் த‌வ‌ற‌ விட்டிருக்கிறேன்.

தவறிய கணங்களுக்காய் வருந்தப் போவதில்லை நான். வரப்போகும் கணங்களில் உங்கள் எண்ணங்களைச் செயலாக்கும் மகனாய் வாழ்ந்து காட்டப் போகிறேன்.
- பிரபு 

No comments: