April 21 2016
பெங்களூருக்கு 2003ல் வந்த புதிதில் காந்திநகரில் ஒரு நண்பரது அப்பார்ட்மெண்ட் அறையில் தங்கியிருந்தேன். அந்த அறையை ஒரு சர்வாதிகாரி நிர்வகித்து வந்தார். அவரது கட்டுபாட்டின் கீழே நான்கு வேலையில்லாத பசங்கள் தங்கியிருந்தார்கள். நான் ஐந்தாவது ஆளாக ஊரிலிருந்து கிளம்பி அந்த அறைக்கு வந்திருந்தேன். (அவரை ஏன் சர்வாதிகாரி என்கிறேன் என்பதை இரண்டு பத்திகளுக்கு பிறகு நீங்களே உணர்ந்து கொள்வீர்கள்.)
அறைக்கு வந்த முதல்நாள் அவர் என்னை தனியே அழைத்து கையில் ஐம்பது ருபாய் தந்து வெளியே சாப்பிட்டு கொள்ளும்படியாக அன்புக் கட்டளையிட்டார். என் மீது இவ்வளவு அன்பா என்று நெக்குருகிப் போய் சாலையோர இட்லி கடை ஒன்றில் சாப்பிட்டுவிட்டு அறைக்கு திரும்பினேன். பிறகு தான் தெரிந்தது அவர்களுக்காக செய்யும் சாப்பாட்டை நான் பகிர்ந்து கொள்ள துவங்கினால் அங்கேயே தங்கிவிடக்கூடும் என்ற முன்னெச்சரிக்கை தான் அந்த அன்பிற்கான காரணம் என்று.
நான் உள்ளே நுழைந்த போது சர்வாதிகாரி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். காலையில் அறைக்கு வந்த போதே கவனித்தேன். அறையில் மின்விசிறியில்லை. ஒரேயொரு ஏர்கூலர் இருந்தது. அது அவருக்கு மட்டுமேயானது என்பது அப்போது தான் புரிந்தது.
சர்வாதிகாரியின் தட்டில் இரண்டு சிக்கன் லெக் பீஸ் இருந்தன. அவரோடு சாப்பிடும் சகஜீவிகள் அவித்த முட்டைகள் மற்றும் ஊறுகாயை தொட்டுக்கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் ஒருத்தரது பார்வை கூட அந்த சிக்கன் லெக் பீஸ் மீது திரும்பவேயில்லை. அவ்வளவு கண்ணியம் கட்டுப்பாடு.
சர்வாதிகாரி சாப்பிட்டு முடித்தவுடன் அவருக்கு ஒருவன் பணிவாக ஒரு டம்ளர் தண்ணீர் மோந்து நீட்டினான். அதை குடித்துவிட்டு ஏர்கூலரய் அணைத்து ஒரமாக வைத்துவிட்டு எழுந்தார். ஒருவன் சர்வாதிகாரியின் மதிய உணவிற்கான டிபன் பாக்ஸ் எடுத்து நீட்டினான். அதை வாங்கி கொண்டு அவர் வாசலுக்கு வந்த போது பயந்து நடுங்கும் ஹவுஸ் வொய்ப் போல ஒருவன் தயங்கி தயங்கி மதிய சாப்பாட்டுக்கு குழம்பு வைக்க தக்காளி வெங்காயம் வாங்கணும் என்று இழுத்தான்.
அவர் வேண்டா விருப்பத்துடன் நூறு ரூபாயை எடுத்து நீட்டி எண்ணெய் இல்லாமல் குழம்பு வச்சா போதும் என்றார். அதை அவர் சாப்பிடப்போவதில்லை. பிறகு எதற்காக மற்றவர்கள் எண்ணெய் சேர்த்து குழம்பு சாப்பிட வேண்டும். என்பதே உள் அர்த்தம், பணிவாக நூறு ருபாயை பெற்றுக் கொண்டு அவரை வழி அனுப்பி வைத்தார்கள். அவர் தெருவை கடந்து போகும் வரை அறை ஒடுங்கியிருந்தது.
அடுத்த அரைமணி நேரத்தில் அறை முழுமையாக உருமாறத் துவங்கியது. ஒருவன் சிகரெட் எடுத்து பற்றவைத்தான். அடுத்தவன் டிவியை போட்டு சத்தமாக பாட்டு கேட்டான். தெருவில் பள்ளிக்கு செல்லும் பெண்பிள்ளைகளை மற்றவன் ரசித்து சைட் அடித்து கொண்டிருந்தான். நான் என்ன நடக்கிறது என்று புரியாமல் உட்கார்ந்து கொண்டேன்.
நன்பன் உடனே அங்கிருந்த ஏர்கூலரை எடுத்து என் முன்னே வைத்து சுற்றவிட்டான். கண்ணியம் கட்டுபாடுடன் இருந்தவன் இப்போது வெறும் ஜட்டியுடன் அறையில் நடந்து கொண்டிருந்தான் என்னடா இது என்று அவனிடம் கேட்டேன்.
அவன் அப்படி தான்டா.. இருப்பான். அவன் தான் வாடகை கொடுக்கிறான். அவன் தான் கைசெலவுக்கு காசு தர்றான். அவனை அட்ஜெஸ்ட் பண்ணிகிட்டு போகவேண்டியது தான். என்றபடியே சிகரெட் பிடிக்க துவங்கினான்.
அறை மிகச் சிறியது. நான்காவது தளம் அதற்கு மேல் மொட்டைமாடிதான். ஆகவே வெயில் சுவரெல்லாம் இறங்கி வழிந்தோடியது. தரையில் படுக்க முடியாது. அன்று மாலை அலுவலகம் விட்டு திரும்பி சர்வாதிகாரி என்னை தனியே அழைத்து கொண்டு அருகாமை இருந்த பூங்காவிற்கு சென்றார். நான் என்ன செய்ய போகிறேன் என்று கேட்டார். தெரியவில்லை என்று சொன்னேன். இன்றிரவே ஊருக்கு திரும்பி போய்விடும்படியாக அறிவுரை சொன்னார். அதெல்லாம் முடியாது என்று உறுதியாக சொன்னேன். அப்போ வேறு ரூம் பாத்துக்கோ என்றார்.
யோசிக்கிறேன் என்று சொன்னேன். அது அவரை கேலி செய்வது போல இருந்திருக்ககூடும். என்ன மயிருக்குடா என் உயிரை வாங்குறதுக்குன்னே வர்றீங்க. என்று கத்தினார். நான் அமைதியாக இருந்தேன்.
பிறகு அவரே கோபம் தணிந்து ரெண்டு நாள் இருந்துட்டு போயிரு என்று சொன்னார். நான் தலையாட்டினேன். ரூம்ல இருந்தா வேலை செய்யணும். கட்டுப்பாடா இருக்கணும். தெருவில் போற பொம்பளை பிள்ளைகளை வேடிக்கை பாக்க கூடாது. அநாவசியமா என்னை கேள்வி கேட்க கூடாது புரியுதா என்றார். தலையாட்டிக் கொண்டேன்.
காலைல்ல ஒவ்வொருத்தருக்கும் ஒரு வேலையிருக்கு .நீ இனிமே தினமும் என் டிரஸ் அயர்ன் பண்ணி கொண்டு வந்து தரணும் என்ன செய்வியா என்றார். தலையாட்டினேன். எவ்வளவு காசு வச்சிருக்கே என்று கேட்டார். ஆயரம் ரூபாய் என்று சொன்னேன். அதை ஊருக்கு போறதுக்கு வச்சிக்கோ என்றபடியே செகண்ட் ஷோ படத்துக்கு போகலாமா என்று கேட்டார். அதற்கும் தலையாட்டினான்.
அன்று அறை நண்பர்கள் யாவரும் சேர்ந்து படத்திற்கு போனோம். படத்தின் இடைவேளையில் இரண்டு நாட்களின் பின்பு நான் ஊருக்கு போய்விட வேண்டும் என்பதை சர்வாதிகாரி மறுபடி நினைவூட்டினார். நான் பலமாக தலையாட்டினேன். இரவு அறைக்கு நடந்து திரும்பி வரும்போதும் அதை நினைவூட்ட அவர் தயங்கவேயில்லை.
அடுத்த நாள் காலை அவரது பேண்ட் சர்டை என்னிடம் தந்து அயர்ன் பண்ணிவர சொன்னார். காசு கேட்டதும் அவருக்கு கோபம் வந்தது. போடா. போய் தேச்சிட்டு வா. அதான் ஆயிரம் ரூபாய் வச்சிருக்கேல்ல என்று சொன்னார். அவருக்காக துணியை தேய்த்து கொண்டுவந்து தந்தேன். அன்று அவர்களோடு அவித்த முட்டைகள் மற்றும் ஊறுகாய் சகிதமாக சாப்பிட என்னை அனுமதித்தார்.
அறையில் அவர் குடிப்பதற்கு தனி கேன் வாட்டர். நாங்கள் குடிப்பதற்கு கார்ப்பரேஷன் தண்ணீர். அறையில் ஒரேயொரு முகம் பார்க்கும் கண்ணாடி மட்டுமே இருந்தது. அதை அவர் கவனமாக தனது சூட்கேஸில் வைத்து பூட்டிவிட்டு போய்விடுவார். யாரும் பவுடர் போடக்கூடாது. எங்கேயும் யாரும் அவர் பேரை சொல்லி கடன் வாங்க கூடாது என்பது கட்டாய நிபந்தனை.
ஆனால் அதை ரகசியமாக அத்தனை பேரும் உடைத்து கொண்டிருந்தார்கள். டீக்கடை துவங்கி துணி துவைக்கும் சோப் வரை அத்தனையும் கடனில் ஒடிக்கொண்டிருந்தது. போதாதற்கு அறையில் இருந்த ஒருவன் அதே தெருவில் வசித்த ஒரு பெண்ணை காதலித்து கொண்டு வேறு இருந்தான். அந்த பெண் மதிய நேரங்களில் அறைக்கே வந்து போவாள். சர்வாதிகாரிக்கு தெரிய வந்தால் அவ்வளவு தான் யாவரும் பயந்து கொண்டேயிருந்தோம்.
இரண்டு நாட்கள் கடந்து போனபிறகும் நான் ஊருக்கு கிளம்பவேயில்லை. அந்தவார இறுதியில் அவர் என்னை மறுபடி அதே பூங்காவிற்கு அழைத்து கொண்டுபோனார். உன் நல்லதுக்கு தான் சொல்றேன். பெங்களூரில் யாரும் பெரிசா வந்திர முடியாது. அதுவும் இது ரெசிசன் பிரியட் வேலை இல்லாம ரொம்ப கஷ்டம். நான் எல்லாம் வந்த புதிதில் முன்று நாட்கள் கூட சாபிடாம இருந்தவன் தான்,,. உன் பீலிங் எனக்கு புரியுது. ஊருக்கு போயிரு என்றார்.
நான் பத்து நாளில் போய்விடுவதாக சொன்னேன். அவர் ஏதோ யோசனை செய்தபடியே ஒரு மாசம் டைம் தர்றேன் என்றார். அவரது தாராள மனதை கண்டு ஆனந்தம் அடைந்தபடியே சார் செகண்ட் ஷோ போகலாமா என்று கேட்டேன். அவர் முறைத்தபடியே அடுத்தவன் காசில் என்ஜாய் பண்றதை முதல்ல விடு என்று அறிவுரை சொல்ல துவங்கினார். ஒரு வாரம் நிம்மதியாக போனது.
ஒரு வழியாக சர்வாதிகாரியின் உலகம் எனக்கு பழகிப்போனது. அவர் யாரையாவது சந்தேகப்பட்டால் தான் அதிகம் கோபப்படுகிறார். அவரது விசுவாசிகளை அவர் ஒரு போதும் இம்சிப்பதில்லை. தினமும் அவரை அரைமணி நேரம் புகழ்ந்தால் போதும் அவர் ஏதாவது நல்லது செய்வார். இப்படி அவரை சமாளிக்க கற்று கொள்ள துவங்கியிருந்தேன்.
ஒரு நாள் ஊரிலிருந்து சர்வாதிகாரியின் தம்பி ஒருவன் கிளம்பி வந்திருந்தான். அவனும் அண்ணனும் அச்சில வார்த்தவர்கள் போல ஒன்றாக இருந்தார்கள். அண்ணன் தம்பியும் வந்த நாளில் நெடுநேரம் ரகசியம்பேசிக் கொண்டார்கள். தம்பி புதிதாக இன்போசிஸில் வேலை கிடைத்து வந்திருப்பதால் இனி அங்கேயே தங்கப்போகிறான் என்று சர்வாதிகாரி அறிவித்தார்.
முன் அறையய் சர்வாதிகாரி எடுத்து கொண்டிருந்தார். நாங்கள் பின் அறையில் ஒடுங்கியிருந்தோம். அந்த அறையில்பாதியை தம்பி ஆக்ரமித்து கொண்டார். தம்பிக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கமிருந்தது. அதை அண்ணனிடம் இருந்து மறைக்க வேண்டும் என்று விரும்பினார். இது தான் அவரது ஒரே பலவீனம் என்பதை புரிந்து கொண்டு அதை வைத்தே தம்பியை அறை நண்பர்கள் சரி கட்டினார்கள்.
அண்ணனும் தம்பியும் தினசரி மாலை தங்களது எதிர்காலத்தை திட்டமிடுவார்கள். எந்த வயதில் வீடு வாங்க வேண்டும். எந்த வயதில் திருமணம். பிள்ளைகளை எந்த பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் எப்போது ஒய்வுபெற வேண்டும் என்பது வரை அந்த யோசனை நீளும். நாங்கள் சிரிக்காமல் அதை கேட்டுக் கொண்டிருப்போம்.
பிறகு அவர்கள் ஒன்றாக சாப்பிடுவார்கள். அவர்களுக்கு மட்டுமே பிடித்த டிவி சேனலை பார்ப்பார்கள். ரிமோட்டை யாராவது தொட்டால் காலி. கோபம் பொங்கிவரும். மொத்தத்தில் அடுப்படியில் அலையும் கரப்பான்பூச்சிகளை போலவே எங்களை அசூயை கலந்த பார்வையுடன் அண்ணன் தம்பிகள் நடத்தினார்கள்.
ஒரு ஞாயிற்றுகிழமை. அன்று சர்வாதிகாரி சரக்கு அடிக்கும் நாள். அவருக்கு தேவையான லெக் பீஸ், கடலை, திராட்சை எல்லாம் வாங்கி வைத்து மற்றவர்கள் காத்திருந்தார்கள். அண்ணன் தம்பி இருவரும் மிகுந்த தோழமையுடன் குடித்தார்கள். மற்றவர்களுக்கு அவ்வவ்போது ஒரு கட்டிங் தருவதை அவர்கள் மறக்கவேயில்லை.
பதினோறு மணி வரை அவர்கள் குடித்துவிட்டு உறங்க துவங்கினார்கள். அறையில் இருந்த இரண்டு நண்பர்கள் சினிமா பார்க்க கிளம்பி போயிருந்தார்கள். நான் டிவி பார்த்து கொண்டிருந்தேன்.
திடீரென பனிரெண்டரை மணி அறையில் ஒரு அலறல் சப்தம் கேட்டது. அறையில் இருந்த சர்வாதிகாரியின் தம்பி தன்னை ஒரு எலி கடித்துவிட்டது என்று கத்திக் கொண்டிருந்தான். நானும் இன்னொரு நண்பனும் புரியாமல் விழித்துகொண்டிருந்தோம்.
எப்படி எலி அங்கே வந்தது என்று எவருக்கும் தெரியவில்லை. சர்வாதிகாரி நாங்கள் தான் ஏதோ சதி செய்து எலியை அறைக்குள் வரச்செய்துவிட்டது போலவே கத்திக் கொண்டிருந்தார். எலி கடித்தால் என்னவாகும் என்று அவர் கேட்ட கேள்விக்கு எவரிடமும் பதில் இல்லை. என் நண்பன் சிரிப்பு தாங்கமுடியாமல் வாயை பொத்திக்கொண்டு வெளியே போனான்.
தன் தம்பியிடம் எவ்வளவு பெரிய எலி என்று அண்ணன் கேட்டார். அது ஒரு சுண்டெலி என்று தம்பி பயத்துடன் சொன்னான்.
இஙகே இடைவெட்டாக ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அது என்னவென்றால் பெங்களுருக்கு வந்த நாள் முதல் சர்வாதிகாரியின் தம்பி லுங்கி கட்டுவதை விட்டுவிட்டு ஷார்ட்ஸ் அணிய ஆரம்பித்திருந்தான். அதை வாரத்திற்கு ஒரு முறை தான் துவைப்பான். கையால் தொட்டால் பிசுபிசுக்குமளவு அழுக்கேறியது அந்த ஷார்ட்ஸ். ஜட்டி அணியும் பழக்கமும் கிடையாது. ஆகவே அவன் அருகே படுப்பதற்கு எவருக்கும் தைரியமிருப்பதில்லை.
அவன் ஒரு மல்லிகைபூ சென்ட் வைத்திருந்தான். காலை எழுந்தவுடன் முகம் கழுவிக் கொண்டு மல்லிகைப்பூ சென்ட்டை உடல் முழுவதும் பூசிக் கொண்டுதான் டீ சாப்பிடவே போவான். அன்றிரவும் காற்றோட்டமாக படுத்துகிடந்த அவனது டிராயருக்குள் தான் சுண்டெலி நுழைந்திருந்தது.
எலி கடித்ததை விட அது எங்கே கடித்தது என்ற ஆராய்ச்சியை அவன் விரும்பவேயில்லை. உடனே அவனை ஆஸ்பத்திரிக்கு அழைத்து கொண்டு போவது என்று முடிவு செய்து அந்த பொறுப்பை சர்வாதிகாரி என்னிடம் ஒப்படைத்தார். அந்த நேரம் காந்தி நகர் பர்ஸ்ட் ஸ்டேஜ அருகே ஒரு மருத்துவமனை திறந்திருக்கும் என்று அவனை அழைத்து கொண்டு ஒரு கால் டாக்ஸியில் கிளம்பினேன். பயம் அவன் முகத்தில் உறைந்து போயிருந்தது.
அவனது நேரம் மருத்துவமனையில் ஒரேயொரு பெண் மருத்துவர் மட்டுமே இருந்தார். அவன் உள்ளேயே வர மறுத்தபடி வெளியே நின்று கொண்டிருந்தான்.
நான் உள்ளேயிருந்த நர்ஸிடம் எலி கடித்துவிட்டது என்று சொன்னேன். எங்கே என்று அவள் அப்பாவியாக கேட்டாள். எனக்கில்லை. அவருக்கு என்று கையை காட்டினேன். ஏன் அவர் உள்ளே வராமல் நிற்கிறார் என்று கேட்டாள். என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.
அவனை உள்ளே வரும்படியாக அழைத்தேன். அவன் என்னை முறைத்தபடியே உள்ளே வந்து நர்ஸிடம் எலி கடித்துவிட்டது என்று கையை விறைப்பாக நீட்டினான். அந்த நர்ஸ் கையிலா கடிச்சது என்று ஆதங்கத்துடன் கேட்டாள். அவன் முறைத்தபடியே ஆம்பளை டாக்டர் இல்லையா என்று கேட்டான்.
அவர் ரவுண்ட்ஸ் போயிருக்கார். வர அரைமணி நேரமாகும் என்றாள். பரவாயில்லை நான் காத்திருக்கிறேன் என்று தனியே போய் உட்கார்ந்து கொண்டான்
பரவாயில்லை. நானே முதல் உதவி மருந்து போட்டுவிட முடியும் உள்ளே வாருங்கள் என்று நர்ஸ் அழைத்தாள். நான் அவனது டிராயரை காட்டி எலி கடித்துவிட்டது என்று தயங்கி தயங்கி சொன்னேன். அவள் முகத்தில் பொங்கிய சிரிப்பை அவளால் அடக்கவே முடியவில்லை. தலைகவிழ்ந்தபடியே உள்ளே ஒடினாள். அறைக்குள்ளாக இருந்த இன்னொரு நர்ஸ் வெளியே எட்டிப்பார்த்து சிரித்தாள்.
சர்வாதிகாரியின் தம்பி என்னை மனதிற்குள்ளாகவே சாபம் கொடுத்து கொண்டிருந்தான். இதற்குள் இன்னொரு கால்டாக்ஸி பிடித்து சர்வாதிகாரியே மருத்துவமனைக்கு வந்திருந்தார். அவர் அதே நர்ஸிடம் போய் எலி கடித்துவிட்டது என்றார். அவள் உடனே உங்களுக்குமா என்று கேட்டாள். அவருக்கு கோபம் தலைக்கு ஏறிவிட்டது. தான் ஒரு அரசாங்க ஊழியர் என்று கத்தினார். அரை மணி நேரத்தின் பிறகு டாக்டர் வந்து பரிசோதித்துவிட்டு ஊசி போட்டார்.
அண்ணனும் தம்பியும் ஒன்றாக அறைக்கு கிளம்பி போனார்கள். மறுநாள் காலை அறையில் சமையல் நடைபெறவில்லை. அண்ணன் தம்பி இருவரும் கோபத்துடன் வெளியே கிளம்பி போனதும் அறையில் இருந்த நண்பர்கள் அந்த எலிக்கு என்னவாக போகிறதோ என்று அதிகம் கவலைப்பட்டார்கள். அறையில் சிரிப்பு பொங்கியது
மாலை சர்வாதிகாரி அறைக்கு திரும்பியதும் அந்த எலி விவாகரத்தில் நான் நடந்து கொண்டது மன்னிக்க முடியாத குற்றம் என்றும் தம்பி அதற்காக நிறைய வருத்தபட்டதாக சொல்லி உடனே வேறு அறைக்கு செல்லும்படியாக உத்தரவு பிறப்பித்தார்.
நான் கண்ணியத்துடன் அதை ஏற்றுக் கொண்டேன். இரவே இனி பெங்களூரில் குப்பை கொட்ட முடியாது என்று பொள்ளாச்சிக்கு பஸ் ஏறிவிட்டேன். அதன் ஆறுமாசத்திற்கு பிறகு அந்த சர்வாதிகாரி திருமணமாகி தனி வீடு பார்த்து போய்விட்டார் அறை காலியானது என்று நண்பன் சொன்னான்.
இப்போதும் அந்த பெங்களுரு காந்தி நகர் அறையை நினைத்தால் அந்த எலிக்கு என்னவாகியிருக்கும் என்ற கவலை இருக்கவே செய்கிறது. என்னை விட நள்ளிரவில் இப்படியொரு கேஸ் வந்ததை நினைத்து அந்த நர்ஸ் எவ்வளவு சிரித்திருப்பாள் என்பதை நினைக்கும் போது தான் என்னாலும் சிரிப்பை அடக்க முடிவதேயில்லை.
-பிரபு