May 17 2016
இரண்டு நாட்களுக்கு முந்தைய இரவில் என் அம்மாவிடம் என் அக்காவை பற்றி கேட்டுக்கொண்டிருந்தேன் அவள் பிறந்து சில மணி நேரத்திலேயே இறந்து விட்டால்! அவள் இருந்திருந்தால் எந்த மாதிரியான ஒரு அக்காவாக இருந்திருப்பாள் என்ற யோசனை தூங்கவிடாமல் வந்துகொண்டே இருந்தது. கண்டிப்பாக எனது குறும்பிலும் பாதியாவது அவளிடம் இருக்கும். நிச்சயமாக பதேர் பாஞ்சாலி படத்தில் வரும் துர்கா மாதிரித்தான் இருந்திருப்பாள்! அவளுக்கும் நான் அப்புவை போல் ஒரு தம்பியாக இருந்திருப்பேனோ என்னவோ!
அந்த படம் அந்தரங்கமாக சில சலனங்களை எனக்குள் உருவாக்குகிறது என்பதற்காகவே அடிக்கடிப் பார்ப்பேன். முதன்முதலில் சென்னையில் என் பெரியம்மா வீட்டில் தான் பதேர் பாஞ்சாலி பார்த்தேன். படம் பார்க்க துவங்கிய சில நிமிசங்களிலே துர்காவிடம் என் மனதை பறி கொடுத்துவிட்டேன். துர்காவின் ஒவ்வொரு செயலும் என்னை அவளோடு மிகவும் நெருக்கமாக செய்தது.
துர்கா கொய்யாபழம் திருடுகிறாள். துர்கா அம்மாவிடம் திட்டுவாங்குகிறாள். துர்கா தம்பிக்கு அலங்காரம் செய்துவிடுகிறாள். ரயிலை காட்டுவதற்காக அழைத்துக் கொண்டு ஒடுகிறாள், பாட்டியோடு ஸ்நேகம் கொள்கிறாள். துர்கா பெரிய மனுஷியை போல புடவை கட்டியிருக்கிறாள். துர்காவின் பெரிய கண்கள், அடர்ந்த கூந்தல், முகச்சுழிப்பு, கள்ளசிரிப்பு என ஒவ்வொன்றாக என்னுள் வேர் பதித்து கொண்டேயிருந்தது.
துர்காவிற்கு உடல் நலமற்று போகிறது. அவள் இறந்து போய்விடுகிறாள். துர்கா இனி இல்லை என்று வீடே அவளின் வெறுமையை உணர்கிறது. அந்த நிமிசத்தோடு படத்திற்குள் முழ்கியிருந்த எனக்கு மூச்சடைப்பு ஏற்பட்டது போன்று படத்தை விட்டு கண்களை வேறு பக்கம் திருப்பத் துவங்கினேன். படம் பார்க்கப் பிடிக்கவில்லை. ஒரு கண்ணாடிக் கோப்பையை கைதவற விட்டது போன்று உள்ளுக்குள் நடுங்கி கொண்டேயிருந்தது.
துர்கா திருடி ஒளித்த வைத்த பொருட்களை அப்பு எடுத்து வெளியே எறியும் போது அத்தனையும் ஒடிப் போய் பொறுக்கி கொண்டுவிட வேண்டும் போலிருந்தது. ஈரக்களிமண் காலில் ஒட்டிக் கொள்வது போல மனதில் துர்கா அப்பிக் கொண்டு விட்டாள். ஆனாலும் அவள் உருவாக்கிய துக்கம் வடியவேயில்லை. இரண்டு நாட்களுக்கு மேல் சென்னையில் இருக்க முடியவில்லை. ஊருக்கு புறப்பட்டுவிட்டேன். ஆனால் துர்காவை பற்றிய நினைவுகள் மட்டும் இன்றும் மனதில் அழியாமல் அப்படியே இருக்கின்றன
துர்கா உயிரோடிருந்தால் என்னவாகியிருக்கும். அவர்கள் அந்த ஊரிலிருந்து வெளியேறி போயிருக்கமாட்டார்கள். அதைவிடவும் அப்புவின் உலகம் வேறுவிதமாக ஆகியிருக்கும். ஆனால் துர்கா படித்திருக்க மாட்டாள். துர்கா யாரையோ திருமணம் செய்து கொண்டு ஒரு எளிய வாழ்க்கையை வாழ போயிருப்பாள். ஆனாலும் துர்காவின் பாசம் அப்படியே இருந்திருக்கும். அப்புவிற்கு வாழ்வின் மீதுள்ள பிடிப்பாக இருந்திருப்பாள். துர்காவும் அப்புவிற்கும் உள்ள வெளிப்படுத்தபட முடியாத அன்பு இன்னொரு தளத்தில் அக்கதையை கொண்டு போயிருக்கும்
துர்கா காசியை பார்த்திருந்தால் மிகுந்த சந்தோஷம் கொண்டிருப்பாள். அந்த படித்துறைகளில் அவளது பாதங்கள் ஒடி களிப்படைந்திருக்கும். படித்துறை புறாக்களுக்கு தீனி போட்டிருப்பாள். துர்கா கல்கத்தாவில் ரயில் நிலையத்தை ஒட்டிய அப்புவின் அறையை கண்டிருந்தால் பால்யத்தின் காட்சியை நினைவு கூர்ந்திருப்பாள். வேதனை மிக்க தங்களது கடந்த காலத்தினை நினைத்து தன்னை மீறி அழுதிருப்பாள்.
படத்தில் கதாபாத்திரங்களை விடவும் அந்த கிராமமும் அதன் இரவு பகல்களுமே என்னை வசீகரித்தன. சத்யஜித்ரே உருவாக்கிய துர்கா ஏன் எனக்கு இத்தனை நெருக்கமாக இருக்கிறாள் என்று என்னை நானே பலமுறை கேட்டுக் கொண்டிருந்திருக்கிறேன். அவள் மீதான எனது விருப்பத்திற்கான காரணங்களில் சில வெளிப்படையாகவும் சில நிழல்மறைவிலும் இருக்கின்றன. அவளது சிறப்பே அவள் நம்மில் சிலரை நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறாள் என்பதே. பால்யத்தின் மாறாத கள்ளத்தை அவள் சிரிப்பு வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறது. துர்கா யாவர் வீட்டிலும் கரைந்து போயிருக்கிறாள்.
துர்கா ஏன் எனது அக்காவின் சாயலில் இருப்பதாக எனக்கு தோன்றியது? இன்னொரு பக்கம் துர்காவை போல தம்பிகளை நேசிக்கும் அக்காக்கள் பலரையும் எனது பால்யம் முழுவதும் பார்த்திருக்கிறேன். அக்கா இல்லாமல் இருக்கிறோமே என்று சிறுவயதில் கவலைபட்டு அழுதிருக்கிறேன். அதுவும் கூட காரணமாக இருந்திருக்க கூடும்
இவையாவையும் விட ஊரை விட்டு வெளியேறி சென்ற குடும்பங்கள் யாவின் பின்புலத்திலும் ஒரு துர்மரணம் இருந்திருக்கிறது என்பதை நிதர்சனமாக கண்டதும் காரணமாக இருந்திருக்கலாம்
என் அக்காவும் இப்படி கண்ணுக்கு தெரியாத ஏதோ காரணங்களை நினைவுபடுத்துவதோடு மட்டுமல்லாது சில நிமிடமே வாழ்ந்தாலும் மின்மினிப்பு காட்டிச் செல்லும் மின்மினிப்பூச்சி போல வாழ்வின் வசீகரத்தை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறாள்.
நீங்கள் பதேர் பாஞ்சாலி பார்த்திருக்கிறீர்களா என தெரியாது. ஆனால் ஒருமுறை அவசியம் பார்க்க வேண்டும் என்பதற்கு ஒரேயொரு காரணமிருக்கிறது. அதில் உங்கள் பால்யமும் கரைந்து கிடக்கிறது. துர்காவை போன்ற சிறுமி உங்களுக்கு சகோதரியாக இருந்திருக்க கூடும்.
- பிரபு