நூலக ஞாபகம்

14-01-16

லயன்காமிக்ஸ்
சுதர்சனிடம் பேசிக்கொண்டிருக்கும் போது சிறுவயதில் தனியாக வீட்டில் நூலகம் நடத்தியது ஞாபகம் வந்தது. முன்றவதோ நான்கவதோ படித்துக் கொண்டிருந்தேன். அந்த கோடை விடுமுறையில் திடீரென்று கையில் இருந்த புத்தகங்களை எல்லாம் போட்டு ஒரு நூலகம் வைத்து சம்பாதிக்கலாம் என்று ஏனோ தோன்றியது. காரணம் சரியாக ஞாபகம் இல்லை. எங்கேயாவது படித்ததாலோ அல்லது “அவனப் பாரு, எப்படி சூட்டிபா இருக்கான்” என்று யாரையோ காட்டி விட்டுப் பெரியவர்களில் யாரோ சொன்னதாலோ இருக்கலாம்.

நாங்கள் இருந்த அந்த மரக்கடை  தெருவின் எதிரே பெரிய சந்தில் 50-60 வீடுகள் இருந்தன. எல்லா வீட்டிலும் ஒரிரு குழந்தைகளாவது இருந்தார்கள். எப்படி எல்லாம் மார்கெட் ஸ்டடி செய்தேனா என்று தெரியாது. ஆனால் நினைத்த இரண்டொரு நாளில் நூலகம் ஆரம்பித்து விட்டேன்.

கையில் எழுபது என்பது புத்தகங்களாவது இருந்தன. லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸில் ஆரம்பித்து பூந்தளிர், ரத்னபாலா, அம்புலிமாமா, கோகுலம், அமர் சித்ர கதா என்று என் வயது சிறுவர்கள் படிக்கும் புத்தகங்கள். அவ்வப்பொது அண்ணனிடம் சுட்ட ஒரு இரு ஸ்போர்ட்ஸ் ஸ்டாரும், ரீடர்ஸ் டைஜஸ்டும் அகப்படலாம். வீட்டுல் எல்லாரும் தூங்கிய பிறகு, அந்த புத்தகங்களை அள்ளிப் போட்டு ஒவ்வொன்றிலும் நம்பர் எழுத ஆரம்பித்து விட்டேன். அதை தவிர அதை படிக்கும் சார்ஜ் என்று நானாய் முடிவு செய்த விஷயங்கள். அமர் சித்ர கதாவாயிருந்தால் 50 காசு, ராணி காமிக்ஸிற்கு பத்து காசு, தீபாவளி மலருக்கு 75 காசு என்று எனக்கு மட்டுமே புரிந்த கணக்கு.

பெட்ரூம் அலமாரியில் இருந்த அத்தனையையும் தூக்கி தூர வைத்து விட்டு இந்த புத்தகங்களை உயர வாரியாக அடுக்கி வைத்தேன். ஒரு பழைய துணியை அயர்ன் செய்து திரையிட்டு கதவை மூடினேன். நூலகத்திற்கு பெயர் வைத்ததாய் ஞாபகமில்லை. அடுத்த நாள் என் நூலக மனி திறப்பு விழா. கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்த நண்பர்களிடம் விஷயம் சொன்னவுடன் கொஞ்சம் புரியாமல் மட்டையை கிழே போட்டுவிட்டு நூலகத்தை பார்க்க வந்தார்கள். அந்த என்பது புத்தகங்களை ஒரு நூலகமாக அவர்களால் ஏற்றுக்கொள்ள முடிந்ததா என்று தெரியவில்லை. ஒரு புத்தகத்தையும் எடுக்காமல் போய்விட்டார்கள்.

அடுத்த நாள் ஜான்சா வந்து ஒரு ஸ்பைடர் புத்தகத்தை எடுத்துப் போனான். செந்தில் ஸ்போர்ட்ஸ் ஸ்டார் எடுத்தான்.  கிருஷ்ணகுமார் எடுத்து போன புத்தகத்தை ரோட்டில் வைத்து விட்டு கிரிக்கெட் விளையாடப் போய்விட்டான். ஒரு கல்லின் மேல் தனியாக கிடந்த என் புத்தகத்தை பார்த்த அந்த கணத்தில் புரிந்து போனது, என் புத்தகங்கள் தான் என் பொக்கிஷம். அந்த புத்தகத்தை எடுத்துப் போய் வீட்டில் வைத்தேன். லைப்ரரி மூடப்பட்டது. இன்று வரை.

No comments: