பொடியான்

April 27 2016

செந்தில்  என்பது அவனது பெயர், ஆனால் அப்படி யாரும் கூப்பிட்டு நான் பார்த்தேயில்லை. பெரியவர்கள் சிறியவர்கள் எல்லோருக்கும் அவன் பொடியான் தான். பொள்ளாச்சியில் பலகோபலபுரம் வீதியில்  வாழ்ந்தவன். இருபத்திஎழு  வயதை கடந்திருக்கும்.

கார் டிரைவர், ஆட்டோ டிரைவர்  மற்றும் எந்த ஒரு குறிகோளும் இல்லாமல் தன் வாழ்வை கொண்டுசெலுத்தி அற்பவயதில் இறந்து போனான்.

நான் அறிந்தவரை நன்பர்களுக்காக  கைக்காசை முழுமையாக செலவு செய்த ஒரே ஆள்  பொடியான் மட்டுமே. செந்தில் ஒருவருடன் போன் செய்து பேசினால் எப்படியும் ஒரு மணி நேரம் பேசுவான். அக்கறையாக நலம் விசாரிப்பான். அவர்களை பற்றியே விவாதம் செய்வான். அதில் எப்போதும் நிறைந்த அன்பும் அக்கறையுமிருக்கும். 

கண்ணாடி தொழில் செய்யும் குடும்பத்தை சேர்ந்தவன். தொழிலில் அவன் திறமையை மிஞ்ச ஆள் கிடையாது. பணம் தேவைப்படும்  நேரம் மட்டுமே வேலை செய்வான். மற்றநேரங்களில் வீதி உழா கிளம்பிவிடுவான். யார் வீட்டோடும் சில நிமிசங்களில் கரைந்துவிடும் மனது அவனுக்கு. அவனுக்கு நண்பர்களாக இல்லாத ஆட்களே கிடையாது. செந்தில் என்னோடு நிறைய நாட்கள் சேர்ந்து சுற்றியிருக்கிறான். ஒன்றாக தங்கியிருக்கிறான். 

ஒரு நாள் ஒரு பட்டு வேஷ்டி வாங்க வேண்டும் என்று என்னை அழைத்து கொண்டு சென்னை சில்க்ஸிற்கு போனான். தேடி சலித்து நல்ல பட்டுவேஷ்டியாக வாங்கினான். யாருக்குடா பொடியான் என்றேன். தெரிந்த ஒருவருக்கு என்றான். நான் அதிகம் கேட்டுக் கொள்ளவில்லை. அன்று மாலை நாங்கள் சாப்பிட போன போது அருகாமையில் உள்ள ஒயின்ஷாப்பிற்குள் நுழைந்து அங்கே வேலை செய்து கொண்டிருந்த பதினைந்து வயது பையனை அழைத்து இந்தாடா உங்கப்பாவுக்கு பட்டுவேஷ்டி என்று இரண்டாயிர ரூபாய் வேஷ்டியை தந்துவிட்டு எதுவும் நடக்காதது போல பையன் முதுகில் தட்டி கொடுத்துவிட்டு வந்துவிட்டான்.

ஒயின்ஷாப் பையனால் நம்பவே முடியவில்லை. அன்றிரவு அந்த பையன் எங்கள் அறைக்கு வந்து செந்தில் முன்னால் அழுது கொண்டிருந்தான். செந்தில் அவன் கைகளை பிடித்து கொண்டு இதுல என்னடா இருக்கு. எங்கிட்ட காசு இருந்துச்சி வாங்கிட்டுவந்து தந்தேன். நீ கொண்டு போய் ஊர்ல கொடுத்துட்டு வா என்று அனுப்பி வைத்தான். ஒயின்ஷாப் பையன் வெளியேறி போன பிறகு உனக்கு இந்த பையனை எப்படி தெரியும் என்று கேட்டேன்.

ஒருநாள் குடிக்க சென்றபோது இவன் நான் கேட்காமலே ஒரு அவித்த முட்டை கொண்டு வந்து சாப்பிடச் சொன்னான். எந்த ஊர் என்று விசாரித்தேன். அப்படி இரண்டு மூணுநாளில் பழக்கமாகிவிட்டது. அவன் வீட்டில் ஒரு திருமணம் . அதற்காக அவன் அப்பாவிற்கு பட்டு வேஷ்டி வாங்க வேண்டும் என்றும் முதலாளி முன்பணம் தர மறுப்பதாகவும் சொன்னான். அதான் நானே பட்டுவேஷ்டி வாங்கி தந்துவிட்டேன் என்றான். செந்திலை தவிர இன்னொரு ஆள் இப்படி நடந்து கொள்ளவே முடியாது.
இன்னொரு முறை  நானும் செந்திலும் பாலகோபலபுரம் பள்ளி அருகே நின்று கொண்டிருந்தோம். ஒரு பள்ளிசிறுவன் செருப்பு போடாமல் நடந்து போய்க் கொண்டிருப்பதை கண்ட செந்தில் ஒடிப்போய் தான் போட்டிருந்த செருப்பை கழட்டி அவனிடம் தந்துவிட்டு வெறுங்காலோடு வந்தான். படிக்கிற பயல் செருப்பு போடாமல் போகிறான். நமக்கு எதுக்கு என்று சொல்லி சிரித்தான்.

செந்திலுக்கு  எப்படி பணம் வருகிறது என்று தெரியாது. ஆனால் எவ்வளவு வந்தாலும் நண்பர்களுக்காக செலவழித்துவிடுவான். அவனுக்காக எதையும்சேர்த்து வைத்து கொண்டதேயில்லை. நண்பர்களை வீட்டுக்கு அழைத்து போய் விருந்து வைப்பது.  மற்றவருகளுகாக எதையும் செய்வது இது தான் அவனது வாழ்க்கை.

சென்னையில் வந்து நிறைய சிரமபடுகிறான் என்று கேள்விபட்டு ஒரு நாள் அழைத்துபேசியபோது அதெல்லாம் ஒண்ணுமில்லை பெப்சி மாமா.(இப்படிதான் எப்பொழுதும் என்னை அழைப்பான்) சரியாகிவிடும் என்று சிரித்தபடி என்னை அழைத்து போய் பீயர் வாங்கி கொடுத்துவிட்டு சென்றான்.

சில வாரங்களுக்கு முன்பு திடீரென ஒரு நாள் போன் வந்தது. ஒரு வாரத்திற்கு முன்பு செந்தில் இறந்து போய்விட்டான் என்று. என்னால் துக்கத்தை தாங்க முடியவேயில்லை. அவனை பற்றி நினைத்து நினைத்து அழுதேன். செந்தில் அபூர்வமான நண்பன். அவன் இறந்த தகவல் கூட தெரியாமல் போய்விட்டதே என்ற துக்கம் மனதை துவள செய்துவிட்டது

செந்திலை போல உள்ளவர்கள் ஒருபோதும் தன்னை முன்நிறுத்திக் கொள்ளவேயில்லை. மற்றவர்களை நேசிப்பவர்கள் அவனுக்காக உள் அன்போடு கூட இருப்பவர்கள் வெகு குறைவு. அப்படியொரு நிஜமான அன்புக்குரியவனை இழந்துவிட்டேன். செந்திலின் நினைவுகள் மனதில் கொப்பளிக்கின்றன. அவன் கொண்டாடப்பட வேண்டியவன்.

- பிரபு 

No comments: