July 01 2016
போன வேலை முடிந்து ரயில் ஏறினால் கீழ் படுக்கை எனக்கு. பக்கத்தில் இருந்தவர் “எந்த ஊர்?”என்றார். கோயமுத்தூருங்க என்றேன்.
பல நேரங்களில் கோயம்புத்தூரில் இறங்குவதற்கு பதிலாக கொச்சினில் போய் இறங்கிய சம்பவங்களையெல்லாம் நினைவில் கொண்டு…. ”ஊர் வந்தா கொஞ்சம் எழுப்பிவிடுங்க… நான் மறந்து தூங்கீருவேன்” என்றேன்.
”நிச்சயமா பிரதர்” என்றார் அவர்.
டிடிஆர் இன்னும் எங்கள் பெட்டிக்கு வரவில்லை.
“என்ன பண்ணீட்டு இருக்கீங்க?”
சி சி டிவி கேமரா பண்ணிட்டு இருக்கேன்…ன்னேன்.
எங்க எங்க பன்னிருக்கிங்க?
School, College, Hospitals, Companies
அப்பறோம் நீங்க என்ன பண்றீங்க?
Blog எல்லாம் எழுதுவேன்…. நெறய புக்ஸ் படிப்பேன்....
நீங்க படிப்பீங்களா? என்றேன் ஆர்வம் மிகுதியில்.
”ஓ படிப்பேன்” என்றார்.
எந்த புக்கு? என்றேன்.
”வேற என்ன? பைபிள்….தான்” என்றார்.
அட சரியாகத்தான் உதவி கேட்டிருக்கிறேன். எழுப்புதல் கூட்டம் நடத்துபவரிடமே என்னை எழுப்பிவிடச் சொல்லி இருக்கிறேன்….
வீசிங் இருக்கிறதோ இல்லையோ… ஆனாலும் சும்மானாச்சுக்கும் இந்த இன்ஹேலரை ஒரு அமுக்கு அமுக்கும் பழக்கம் உண்டு. இதைப் பார்த்த பக்கத்து பெர்த் பிரதர் “உங்க சரீரத்துல பிரச்சனை இருக்கு” என்றார்.
இருக்குறதுனாலதான இதை அமுக்குறேன்? என்றேன். காலைல நீங்க எந்திரிக்கறப்போ இந்தப் பிரச்சனை உங்க சரீரத்த விட்டுப் போயிருக்கும் என்றார் கனிவாக.
நீங்க எம்.பி.பி.எஸ் எந்தக் காலேஜ்ல முடிச்சீங்க? என்றேன் ஆச்சர்யம் தாளாமல்.
நான் டாக்டரில்லை..,… ஆனா உங்குளுக்காக ஜெபிச்சா சரீரம் சரியாகும் என்றது அது.
அய்யய்யோ…. மத்தவங்களுக்கு எல்லாம் எதெதுலயோ கண்டம்ன்னா….. நம்முளுக்கு நாக்குல கண்டமாச்சேன்னு பயம் கிளம்பீடுச்சு.
”அதுக்கு விசுவாசம் முக்கியம் பிரதர்” என்றார் மீண்டும்.
இங்க அவனவன் சுவாசத்துக்கே சிரமப்பட்டுகிட்டு இன்ஹேலர் அடிச்சா இது வேற விசுவாசத்தப் பத்தி வகுப்பெடுக்குதே…. ஒருவேளை அதுக்கும் ஒரு இன்ஹேலர் வந்திருக்கோ என்னவோ….. யார் கண்டது?
ஆனாலும் வாயைத் தொறந்தா அப்புறம் நிச்சயமா கொச்சின்தான் என்கிற பயத்தில் தூங்க ஆரம்பித்தேன்.
டீ…. காபி…. டீ…. காபி…. சத்தம் கேட்டு எதேச்சையாய் விழித்தால் திருப்பூரில் நிற்கிறது வண்டி. நம்ம “விசுவாசமோ” குறட்டையின் உச்சத்தில்.
அய்யா கோயமுத்தூர் வந்திரும் எந்திரிங்க என்று எழுப்பி விட்டேன். அவர் சொன்னது மாதிரியே எனக்குள் ஏதோ ஒரு மாற்றம் இருப்பது போல பிரமை.
போய் மூஞ்சி கழுவி விட்டு வந்து அமர்ந்தார்.
“பிரதர் சரீரத்துல ஏதாவது மாற்றம் தெரிஞ்சுதா? என்றார் மறக்காமல்.
ஆமாங்க…. என்னவோ ஒரு மாற்றம் தெரியற மாதிரி இருக்கு….
”நான் சொன்னனில்ல…. ராத்திரி முழுக்க ஜெபிச்சேன். உங்க சரீரம் குணம் ஆகணும்கிறதுக்காக… அதான்…. அதான்…. பலிச்சுடுச்சு….” உற்சாகத்தில் துள்ளினார் அவர்.
என்ன மாற்றம் தெரியுது உங்குளுக்குள்ள… கமான்… சீக்கிரம் சொல்லுங்க பிரதர் என்று பரபரத்தார் மனிதர்.
எனக்குள்ள இருந்த வீசிங் போன மாதிரி இருக்கு….. ஆனா….
”என்ன ஆனா? கமான் தயங்காம சொல்லுங்க….”
அதுக்கு பதிலா ஹெர்ட் அட்டாக் வந்தமாதிரி இருக்கு என்றேன்.
வாடிகனுக்குப் போனாலும் வயித்தெரிச்சல் தொலையாது….ங்குறது இதுதான் போலிருக்கிறது.
No comments:
Post a Comment